நாமளும் எவ்வளவு நாள்தான் சும்மா பாத்துக்கிட்டே இருக்கிறது? பட்டன் உதுந்து போன டவுசர முடிச்சுப் போட்டு இடுப்புல நிப்பாட்டி, அப்படியும் அகஸ்மத்தா இருக்கும்போது நழுவிறக் கூடாதுன்னு எப்பவும் அலாட்டா இருந்த வயசுல பார்த்த ஏதோ ஒரு படம் - அப்பல்லாம் படம் பாக்குறதே அப்படி ஒரு கொண்டாட்டம்; விஜயகாந்த்(கேப்டன், 'புரட்சி'க்கலைஞர்) கதாநாயகன்; கதாநாயகி (அதாவது வி.காந்துக்கு ஜோடி) யாரென்று நினைவில்லை; அனேகமாக அந்நாளைய வி.காந்தின் ஆஸ்தான கதாநாயகி விஜியாகத்தான் இருக்கும். ஒய்.ஜி மகேந்திரா நகைச்சுவை நடிகர். அந்தப் படத்தில் ஒய்.ஜி.எம்முக்கு ஒரு பழக்கம் உண்டு; அதாவது யார் மீதாவது கோபம் வந்தால் உடனே ஒரு காகிதத்தில் அந்த நபரின் பெயரை எழுதி அதை அப்படியே கசக்கி எறிந்து விடுவார். இது தான் அவர் அந்நபரை கொடூரமாகத் தாக்கும் முறை. அதேபோல நமக்கு ஏற்படும் அறிப்பை இப்படி வெட்டியாகச் சொறிந்து விட்டுக் கொள்ள வேண்டியது தான் என்று இறங்கி விட்டேன்.
நானும் பல வலைப்பூக்களை, எழுத்தாளர் மனைகளை, வலைப்பூக்களின் பின்னூட்டங்களைப் படித்துப் பார்க்கும்ப்போது இரண்டு விஷயங்களைக் கவனித்துள்ளேன். ஒன்று, கருத்துக் கூறியவர்களை வாசிப்புப் பழக்கமே இல்லை என்று ஒருவர் குறை கூறுவது. இதில் எனக்கு பெரிய மாறுபாடெல்லாம் கிடையாது; ஏனென்றால், நானே அவ்வாறான பழக்கமில்லாமல்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் காரணம் என்னவென்று பின்னர் கூறுகிறேன். இரண்டு, தனக்கு எல்லாம் தெரியுமென்று, அடிப்படை வாசிப்பு, அதாவது அன்றாடம் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளை வாசித்தால் கூட கிடைக்கப் பெறும், அறிவு கூட இல்லாமல் எழுதுகிற பதிவர்கள், அவர்கள் எழுதியதில் உள்ள தவறை விபரம்றிந்தோர் யாரேனும் சுட்டிக் காட்டினால், உடனே மிகுந்த கோபமடைந்து அவர்களை குந்தாங்கூறாகக் காய்ச்சுவது. எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் 'அருமையான பதிவு' என்று ஒற்றை வரியில் பின்னூட்டம் போடும் ஒரு குழு உண்டு; இவர்கள் தரும் எரிச்சல் பொறுத்துக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இது போன்ற மொக்கைப் பதிவர்களுக்கு தீவிர ஆதரவுக் குழு ஒன்று இருக்கும்; அதாவது அவர்களும் இவ்வாறான மொக்கைகளை எழுதிக் குவித்து சமூக கோபத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள்தான். இந்த ஆதரவாளர்கள், முன்னர் கூறிய மொக்கைப் பதிவருக்கு ஆதரவாக அவரின் தவற்றைச் சுட்டிக் காட்டியவருக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்டு அவரைக் குத்திக் கிழித்து விடுவார்கள். ஆனால் நான் எடுத்துக் கொண்ட விஷயம் அவ்விரண்டும் அல்ல. பிறகெதற்கு இந்த நீட்டி முழக்கிய ஒரு வெட்டிப் பத்தியென்றால், நமது பின்னணியும் சாதாரணமானது இல்லை என்று காண்பிக்க ஒரு build up தான்.
எனக்கும் பெரிய அளவில் வாசிப்புப் பழக்கமெல்லாம் ஒன்றுமில்லை. படக்கதைகளில் ஆரம்பித்து, துணைப் பாட நூல்களின் கதைகளில் கவரப்பட்டு, ராஜேஷ்குமார், பாலகுமாரன் வழியாக, தற்கால 'இலக்கிய' வாசிப்புக்கு வந்து சேர்ந்துள்ள ஒரு எளிய பின்புலம் தான். 'இலக்கிய' வாசிப்பு என்றவுடன், ஒன்றும் பெரிதாக எண்ணிவிட ஒன்றுமில்லை. எல்லாம் மேம்போக்கானது தான். அதுவும் தற்பொழுது உட்கார்ந்து வாசிக்கும் பொறுமையெல்லாம் போய்விட்டது. ராஜேஷ்குமார் என்றால்தான் பொறுமை வரும் போல. சரி பிறகு எப்படித்தான் தெளிவது? இப்படி 'பேத்த' ஆரம்பிக்கலாம். 'அருமையான பதிவு' பின்னூட்டங்களைத்தாண்டி 'குண்டக்கமண்டக' கேட்க எப்படியும் ஓரிருவர் வருவர். அவ்வாறான விவாதங்களில் தெளிந்து கொள்ளலாம் என்று 'பேத்தல்கள்' ஆரம்பித்து விட்டேன். நமது பேத்தல்களில் பெரும்பாலும் அடுத்தவரைக் குறைகூறும் பதிவுகள் வரும் வாய்ப்புத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் நமது குணாதிசயம் அவ்வாறு அமையப் பெற்றதாகும்.
No comments:
Post a Comment