Monday 22 August 2011

கண்ணுக்குக் கண்

இன்று ஞாநி அவர்களின் திண்ணையில் சிறிது உறைந்து விட்டு வந்தேன். கண்ணுக்குக் கண்ணில் வழக்கமாக தனது ஆணித்தரமான வாதங்களைப் பதிவு செய்திருந்தார்.

சில கருத்துக்கள் நியாயமாகவே பட்டன. சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் கருணைமனு நிராகரிப்புக்களுக்குப் பின் கொடுங்கோல் இராச்சியமாகச் சித்தரிக்கப்படும் பாரதத்தில் மரண தண்டனை, சட்டமாக இருந்த போதும் அது அந்த அளவுக்கு பெரும்போக்காக நிறைவேற்றப்பட்டது இல்லை என்ற நிதர்சனம் உணர்ச்சிக் கும்பலான தமிழ் மக்களின் காதுகளில் விழுமா என்பது ஐயமே. குறிப்பாக "விடுதலைப் புலிகள் ஈழத்தில் சுமார் பத்தாண்டுகள் சுதந்திரமாக ஆட்சி நடத்தியபோது கவிஞர் செல்வி போன்றவர்களுக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றியதை இவர்கள் கண்டுகொண்டதே இல்லை" என்ற கருத்துக்கு 'இனி தமிழ் இனத் துரோகி' என்ற அடைமொழியால் தமிழ் கூறும் நல்லுலகால் அவர் அழைக்கப்படக் கடவதாக. இதனை ஒற்றி மேலும் பல புள்ளி விபரங்களைக் கொடுத்திருக்கிறார். கட்டுரையைப் படித்துக் கொள்ளவும்.

அடுத்தது மரண தண்டனை தடை செய்யப்பட்ட மேல்நாடுகளிலும், தடை செய்யப்படாத நாடுகளிலும் குற்றங்கள் குறையவில்லை என்ற வாதம். மேலைநாடுகளில் செயல்படுத்தப்பட்டால் கண்ணை மூடிகொண்டு நாமும் அதனைச் செயல்படுத்துவதுதானே நமது பண்பாடு? பண்பாட்டைச் சிதைக்கும் அதிகாரத்தை நமக்கு அளித்தவர்கள் யார்? வெள்ளைக்காரன் என்றாவது பொய் சொல்வானா?

வெள்ளைக்காரன் செய்யும் ஒன்றை ஒருபடி அதிகமாகவே செய்வது தானே நமது பண்பாடு? விளங்கவில்லை என்றால் சில உதாரணங்கள் - குளிர் காரணமாக, மார்கழியில் கூட நமது தட்பவெப்ப்பத்தில் புழுக்கத்தை உண்டாக்கும், வெள்ளைக்காரன் அணியும் உடைகளை, சித்திரையில் கூட பெருமையோடு போட்டுக் கொண்டு நமது மேன்மையை உலகுக்கு உணர்த்துதல்; அவனது வழிவழி வந்த குடி கலாசாரத்தை, பெருமைக்காகவே 'நாங்கள்ளாம் ஒரு புல்லை (full) ராவாக் குடிப்போமில்லை' என்று அவனே வெட்கும் அளவுக்குப் பெருமையோடு நமது வெற்றியை உலகுக்கு உணர்த்துதல்; இன்னும் பட்டியலிட்டால், தனிக் கட்டுரையாகவே போடலாம்.

இந்த நமது பண்பாட்டினை, அதாவது நாம் வெள்ளைக்காரன் செய்வதில் வெள்ளைக்காரனை விட ஒரு படி மேலே என்ற பண்பாட்டினை கீழ்க்காணும் ஞாநி அவர்களின் கருத்தினை ஒற்றி யோசிப்போமா?

"மரண தண்டனை கூடவே கூடாது என்று சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் மனிதர்கள் எல்லாரும் முழுக்க முழுக்க சரியாகச் செயல்படக் கூடியவர்கள் அல்ல என்பதுதான். அரசு அமைப்பு, நீதித்துறை அமைப்பு, காவல் துறை அமைப்பு எல்லாமே மனிதர்களால் நிர்வகிக்கப்படுபவை. மனிதர்கள் ஒருபோதும் தவறே செய்யமுடியாதவர்கள் என்று ஒருபோதும் அறிவியல்ரீதியாக நிரூபிக்க இயலாது.வழக்கை விசாரிப்பவர்களோ, நீதி வழங்குபவர்களோ தவறு செய்திருந்தால், என்ன ஆகும் ? மீதி எந்த தண்டனையையும் விட மரண தண்டனை கொடூரமானது. அதில் ஏற்படும் இழப்பை ஒருபோதும் சரி செய்யவே முடியாது."


முழுக்க முழுக்க சரியாகச் செயல்படாத ஒரு அமைப்பு விசாரித்து, ஒருவனுக்கு மரணதண்டனையத் தவிர்த்து விட்டு ஒரு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தால் சரியாகி விடுமா? உயிர் இழந்தால் மட்டும்தான் சரி செய்யப்பட முடியாத இழப்பா? ஒருவன் சிறையில் 10 ஆண்டுகள் கழித்து விட்டு, அதன்பின் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு இந்த 'சரியாகச் செயல்படாத அமைப்பு' கடந்துபோன அந்த 10 ஆண்டுகளைத் திருப்பிக் கொடுத்து விட முடியுமா? அதுவும் ஈடு செய்யப்பட முடியாத இழப்புதானே?

"கொலை செய்தவருக்கு சட்டத்தின் பெயரால் மரண தண்டனை விதித்து அவரைக் கொல்வதும் இன்னொரு கொலைதான். ஒருவர் உயிரை எடுக்க இன்னொருவருக்கு உரிமை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களால் உருவாக்கப்படும் அரசு போன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். கொலை செய்வோருக்கு மரண தண்டனை விதித்தால்தான் அப்படிப்பட்ட குற்றங்களை செய்ய மற்றவர்கள் பயப்படுவார்கள் என்ற வாதம் உலகம் முழுவதும் தவறென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒரு கொலைக்கு பதில் கொலை என்பது ‘கண்ணுக்குக் கண்’ சித்தாந்தம். அப்படிப் பழி வாங்கிக் கொண்டே போனால் முழு உலகமும் குருடாகிவிடும் என்பார் காந்தி. எனவே என்னையே ஒருவர் கொலை செய்தாலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று சொல்வதுதான் உண்மையான மரண தண்டனை எதிர்ப்பாகும்."


சரி, மனிதருள் ஒருவர் தனக்குக் குற்றம் என்று பட்ட ஒன்றுக்காக அல்லது தனக்கு ஒருவன் அடங்கி நடக்கவில்லை என்ற காரணத்துக்காக, தன்னைவிட எளியவன் ஒருவனை தனது அடியாட்களைக் கொண்டு தூக்கி வந்து அடித்துத் துன்புறுத்தி, அறையினில் அடைத்து வைத்தல் 'ஆள்கடத்தல்' என்று நாம் ஏற்றுக் கொண்டால், அது மனிதர்களால் உருவாக்கப்படும் அரசு போன்ற அமைப்புக்களும் பொருந்தும் தானே? குற்றம் செய்பவருக்கு சிறைத் தண்டனை விதித்தால்தான் அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் பயப்படுவார்கள் என்ற வாதம் உலகம் முழுவதும் தவறென்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஒரு ஆள்கடத்தலுக்கு பதில் இன்னொரு ஆள்கடத்தல் என்பது 'கொலைக்குக் கொலை' சித்தாந்தம். அப்படிப் பழி வாங்கிக் கொண்டே போனால் உலகம் உருப்படாதென்பார் முற்போக்காளர் ஞாநி. அவரை ஒருவர் கொலை செய்தாலும் அவர் குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாதென்று கூறும் உறுதியாளர். அதே உறுதியுடன் இருக்க முடியாதவர் கண்டிப்பாகக் கொலை செய்யப்பட வேண்டிய ஒரு பிறவிதான். கொலை செய்யப்பட்ட பின் ஞாநி போல் அவர் கொலை செய்தவரை மன்னிப்பாரா என்று இங்கு என்னால் உறுதியாகக் கூறமுடியாது.

ஆகவே, இன்னும் எத்தனை நாள்தான் மேலை நட்டைப் பார், அங்கு இல்லை இங்கு மட்டும் ஏன் என்று கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்? மேலைநாடுகள் இந்தியாவைப் பார் என்று போற்றுமளவுக்கு நாமும் நமது அமைப்புகளை மாற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாமா? என்று நமது காவல்துறையும், நீதிமன்றங்களும், இராணுவமும் கலைக்கப்படுகின்றனவோ, என்று ஒருவன் சுதந்திரமாக ஒரு வீட்டுக்குள் புகுந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பவர்களின் வாழ்வை முடித்து விட்டு சுதந்திரப் பறவையாக இந்த நாட்டில் உலவ முடிகிறதோ அன்று தான் நாம் ஒரு பொற்காலத்தில் வாழ்வதாக, மேலை நாட்டினருக்கு இணையாக வாழ்கை கொண்டிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அதுவரை நாம் ஒரு காட்டுமிராண்டிகள் கூட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

பின்குறிப்பு: ஆண்டவா, குற்றவாளிகளிடமிருந்து எங்களை ஓரளவாவது இந்த அரசாங்கம் காப்பாற்றும். ஆனால் இந்த முற்போக்காளர்களிடமிருந்து காத்துக் கொள்ளும் சக்தியை எங்களுக்குத் தருவாயாக.