Saturday 21 May 2011

நாம் தமிழர் - தமிழ்த்தமிழன்

கருப்பச்சாமி என்கிற நான்.... நான் என்பது இந்த எனது உடலா? இல்லை - நான், அதாவது கருப்பச்சாமி என்கிற நாமகரணம் கொண்டு ஒரு பூத உடலுடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், இறந்து, இந்தப் பூதவுடலை எரித்தோ அல்லது புதைத்தோ அழித்தபின்னும் கருப்பச்சாமியாகத்தானே அறியப்படுவேன்? அப்படியானால் கருப்பச்சாமி என்ற எனது இந்த நாமகரணம் எனது உடலுக்குக் கொடுக்கப்படவில்லை; அப்படியானால்... ஆனால் கருப்பச்சாமி என்று நான் மட்டும் அழைக்கப்படுவதில்லையே? கருப்பச்சாமி என்றால், இப்பூவுலகில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பல பூதவுடல்களையோ அல்லது அவ்வுடல்களை இயக்கிக் கொண்டிருக்கும்/இயக்கிய உயிர்களையோ குறிக்கலாமன்றோ? அப்படியானால் நான்? - ஆரம்பிச்சுட்டான்யா என்று நீங்கள் எகிறும் முன் - இந்தப் பதிவு இந்தத் தத்துவ விசாரம் பற்றியதல்ல. இதற்குக் கூட விவாதித்து விளக்கம் கண்டுவிடலாம். ஆனால் இந்த 'தமிழன்'-னுக்கு definition யோசித்தால் எனக்கு மண்டைக் கிறுக்கு வந்துவிடும் ("இப்ப மட்டும் என்ன வாழுது?"). ஏனென்றால்...

தமிழன்னா யாருய்யா? தமிழ் பேசுறவனா? தமிழ் பேசும் பகுதியில் பிறந்தவனா? தமிழன் தமிழ்தான் பேச வேண்டுமா? தமிழன் தமிழிலும் பேச வேண்டுமா? தமிழ் பேசினால் மட்டும் தமிழனா? ஒரே கொளப்பம்யா..

எப்படி இந்தக் கொளப்பம் வந்துச்சுன்னா... கொளப்பம்னா அது இன்னிக்கு நேத்திக்கில்ல; தமிழனையும் தமிழையும் காப்பாத்துறதுக்கு ஒரு கூட்டம் கெளம்பிச்சே? அப்பலயிருந்தே எனக்கு வந்துருச்சு.

எப்படி இந்தக் கொளப்பம் வந்துச்சுன்னா... கொளப்பம்னா கொஞ்ச நஞ்சமில்லை. அன்னாடம் தமிழன் 'label' உள்ள பலரையும் பைத்தியம் புடிக்க வச்சு என்னையப் பாத்தாலே 'கிட்ட வந்தாலே கடிச்சு வச்சுரும்டா'-ங்கற range-ல அவவன் ஓட ஆரம்பிக்கிற அளவுக்கு நான் பிராண்டீருக்கேன்.

எங்கேருந்து ஆரம்பிக்கலாம்? 'ஆயிரமாயிரமாண்டுகளாய் ஆர்வத்தோடு ஆள்வோருக்கும் ஆண்டவருக்குமுழைத்து, அண்டத்திலேயாறா இரணத்தோடும், ஆரியர்க்கடிமையாயும், ஆசுவாசமற்ற ....' என்று அடுக்கு மொழியென்ற பெயரில் குண்டக்க நம்மள குனிய வச்சு... வேண்டாம்; நல்ல வார்த்தைல சொன்னா சொல்ல வந்ததோட வீரியம் போய்ரும். கெட்ட வார்த்தைல சொன்னா நாகரீகமா இருக்காது (நமக்கு விவஸ்தைன்னு ஒண்ணு இருக்குல்ல?). இவிங்கள்ட இருந்து ஆரம்பிச்சோம்னாக்க இந்த ஜென்மத்துல முடிச்சுக்குற மாட்டொம். தவிர வீச்சம் பொறுக்க முடியாது. இவிங்யளோட aim என்னங்கிறதுல இவிங்யளுக்கும், நமக்கும் எந்த doubt-ம் இல்ல. ஆனா இவிங்யள்ட்ட என்ன ஒரு நல்ல விஷயம்னா வேஷம்லாம் சரியாப் போட்ருவாய்ங்ய.

பாயின்ட்க்கு வர்ரேனே. சிறு வயசுல நானும் - நான் முன்னாடியே ஒருபதிவுலசொல்லீருக்குற மாதிரி, சிறுவயசுல சினமா பாக்குறதுன்னா எனக்கு ரொம்பக் கிறுக்கு - 'என் இனிய தமிழ் மக்களே'ன்னு தகர டப்பாவைத் தரையில வச்சுத் தேச்ச மாதிரியான, இப்பிடிப்பேசினாத்தான் திராவிடப் பாரம்பரியமுன்னு form-க்கு கொண்டுவரப்பட்ட ஒரு கொரல்ல நம்ம இமயம் bbaரதிர்ராzzaa(மன்னிக்கணும், அவரு சொல்றா மாதிரியே அவரு பேரப் போடுறதுக்கு தமிழ்-ல எழுத்து இன்னும் கண்டுபுடிக்கல) அறிமுகப்படித்தி வச்சு அதுக்கப்புறம் ஒரு ரெண்டரை மணி நேரத்துக்கு வசனமா பாட்டான்னு கண்டுபுடிக்க முடியாத ஒரு form-ல படத்துல வர்ர character-கள் ஒருத்தருக்கொருத்தர் communicate பண்ணிக்கிட்டு, side-ல ஒரு கிளவி(யோ அல்லது படத்துல வர்ர ஒரு வில்லியோ (வாழ்க தமிழ்) ) பழமொழியா punch டயலாக்கோ யாரும் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்காத, 'ச்செக்காணூரனில செக்காட்டுனா ச்சோளவந்தான்ல எண்ண கொட்டிச்சாம்' மாதிரி ஏதொ ஒண்ணை சொல்லிக்கிட்டு, எது எப்பிடி இருந்தாலும் கடேசில அவ்வளவு பேரும் அருவாளத்தூக்கீட்டு அம்மங்கோயில் வாசல்லையோ, கருப்பனசாமி கோயில் வாசல்லையோ ஒருத்தர ஒருத்தர் வெட்டிக்கிட்டு சாவர மாதிரி template-ஆ வர்ர படங்களைப் பார்த்துட்டு இமயம் இமயம்தான்னு கெறங்கிப் போய் கெடந்துருக்கேன். ஆனா ஒரு தடவ கூட நானும் ஒரு கெராமத்தான் தானே; நம்மாளும் மதுரக்கிட்டதானே இருக்கோம்; நம்மூருல ஒருத்தனும் இப்பிடியெல்லாம் hysterical-ஆ நடந்துக்குறதில்லையே?-ன்னு யோசிச்சுப்பாத்ததில்லை. சரி, சினிமான்னா கொஞ்சம் அதிகப்படியாத்தான் இருக்கும் தான். ஒருகட்டத்துல தமிழனுக்கு நான்தான் certification authority-ன்னு கெளம்பி முத்தமிழ் வித்தவருக்கு ஒரு பக்கமும் இலங்கைத் தமிழருக்கு ஒரு பக்கமும் ஓவராச் சொம்படிக்க ஆரம்பிச்சப்பதான் எனக்குத் தோனிச்சு, இந்த மனுசன் என்ன பண்ணினான்? என்ன தகுதில எல்லாருக்கும் தமிழ் label குடுக்குறான்?-ன்னு.

இன்னிக்கி நீங்க சாதாரணமாப் பாக்கலாம். ஊருல இருக்கற அம்புட்டு பேரும் advice பண்ணக் கெளம்பிட்டாய்ங்ய (அட என்னையும் சேத்துதான்). படத்துக்குப் படம், நம்ம இளையதளபதி (ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?) கூட நாட்டுல இளைஞர்கள் எப்படி இருக்க வேணுமுன்னு ஒரு குத்துப் பாட்டுல வந்து சொல்லீட்டு, sorry, பாடீட்டுப் போவாரு. சலிச்சுப் போச்சு. ஆனா எனக்கு, அப்போ, இந்த 'பொதுவாக எம்மனசு தங்கம்'ங்குற (இன்னிக்கி வரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு) பாட்டு வந்த புதுசுல தோணும்; இவன் என்னடா பண்ணீட்டான்? ஒரு மாட்ட அடக்கிப்புட்டு(அதுவும் படத்துல), 'ஒலகத்துல நீ இப்பிடி இரு; நல்லாருப்ப. ஒங்க ஊருக்கு நல்லது பண்ணு'-ன்னு ஒலகத்துக்கே advice பண்ணுறான்னு. வெளீல சொன்னா நம்மள கிறுக்கேம்பாய்ங்ய. அந்த மாதிரி, மொக்க படங்கள எடுத்துப்புட்டு தமிழ் கெராமத்துக் கலாச்சாரத்த recondition பண்ணுனதா நெனச்சுக்கிட்டு, certification authority பொறுப்ப கைல எடுத்துக்கிட்டு இவிங்ய குடுக்குற டார்ச்சர் இருக்கே... முடியல.

அதேபோல இன்னும் 2 விடுதலை வீரர்கள். சீமான் மற்றும் திருமாவளவன். ஒருகாலத்துல Srilanka-ல Indian team விளையாடினப்போ, அதப் பாக்க தமிழ் கூறும் நல்லுலகுலருந்து போனவிங்யளோட பொறப்ப கேளிவிக்குள்ளாக்குன (என்ன பட்டம்னு தெரியல) சீமான், அதுக்குக் கொஞ்ச காலம் முன்னாடித்தான் ஒரு சிங்களப் பொண்ண நாயகியாப் போட்டு ஒரு படம் எடுத்தாரு (தம்பி). ஒருவேளை 'கலைச் சேவை'க்கு இந்த மாதிரி birth rule-லாம் பொருந்தாது போல.

ஒவ்வொரு தரமும் இலங்கைல விடுதலைப்புலிகளின் கை தாழும்போதும் தமிழினத்துக்கு (அது தான் இப்போ என்ன?) ஆதரவா சத்தமா கூவிட்டு, தேர்தலோ, பதவியோ, இலாபமோ (எல்லாம் ஒண்ணுதனப்பா) சத்தமில்லாம தியாகத் திருவிளக்கு கூட கூட்டுவச்சு கும்மியடிக்கிற விடுதலைச் சிறுத்தை (ங்கொய்யால எவனும் மனுஷ்னில்ல போலருக்கு) கூட நம்ம நாட்டுல உண்டு.

சரி அதெல்லாம் வியாபார உத்தி. தந்திரம். நாம கொண்டு போய் அதுல மூக்க நொழைக்கப்டாது. ஆனா நமக்கு என்ன பிரச்சனைன்னாக்கா, தமிழன் தகுதிக்கு rules create பண்னும் இவுக எதத் தமிழ்த் தகுதீன்னு சொல்லுறாகன்னு தெரியல.

கொஞ்சகாலத்துக்கு முன்ன இந்தப் பதிவில் டோண்டு அவர்கள் ஒரு பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தலித்துகளின் தலைவர்கள் எனச்சொல்லிக் கொள்ளும் திருமா போன்றவர்கள் ஜீன்ஸ் ரெய்பேக் ஷூ ஆகியவற்றைத் தனக்கு மாட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் ஒரு பங்கையும் தங்கள் இன ஏழைகளௌக்கு செய்கிறார்களா என்பதை பாருங்கள். அவர்களுக்குள்ளேயும் சாதி ஏற்றத் தாழ்வுகள் உண்டு.


அதுக்கு அஞ்சா சிங்கம் (:)) அவர்கள் இவ்வாறு பதிலிறுக்கிறார்:

ஏன் சார் ஜீன்சும் ரீபாக் ஷூவும் உங்கள் கண்ணை உறுத்துதா பாருங்கப்பா இவங்க பார்வைய .......................


அதென்னமோ தமிழ ரொம்பத் தாங்கிப் பிடிக்கிறவங்களுக்குக் கீழ்க்கண்ட பழக்கங்கள் உண்டு:
1. தமிழ்-ல பேசுறது கம்மி (ஆனா வேறு மொழில பேசுவாங்களான்னா, அது தான் இல்லை; ஓட்டை இங்கிலிசு தான்)
2. தங்களது பிள்ளைகளைத் தமிழில் படிக்க வைப்பதில்லை (குறிப்பா ஆங்கிலம் தான் படிக்க வைப்பாங்க; அவங்க பிள்ளைங்கள்ளாம் நல்லா ஆங்கிலம், இந்தி எல்லாம் பேசுவாங்க)
3. தமிழர் உடை உடுத்துவதில்லை (கண்டிப்பாக மேற்குறிப்பிட்ட மூவரும் இல்லை)
4. தமிழர் பழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாவற்றையும் பழிப்பார்கள் (அப்புறம் எதுதான்யா தமிழன் பெருமை?)

வேறு ஏதும் தமிழ்ப் பழக்கங்கள்? ம்ம்ம் எல்லாவற்றையும் நொட்டை சொல்வார்கள். அப்புறம் தனக்கு வராத, தன்னால் இயலாத எதையும் செய்பவர்கள் தமிழர்கள் அல்ல. அதற்கான அத்தாட்சிகளாக மாட்டியவர்கள் ஈழத்தமிழர்கள். 'நான் அவுங்கள support பண்ணுறேன் அதனால நான் தமிழன்; நீ பண்ணலைன்னா தமிழன் இல்ல' இப்படீன்னு எல்லாத்தையும் புடிச்சுத் திட்டுவாங்க. அதுலையும் ஒரு தனி equation உண்டு; ஈழத்தமிழன்=LTTE.

உதாரணத்துக்கு மேற்குறிப்பிட்ட டோண்டு/அஞ்சா சிங்க(:)) உரையாடலையே பார்ப்போம். மேலை உடை (நமது சூழலுக்கு ஒவ்வாவிட்டாலும்) உடுத்துவது மேன்மை என்று பொதுப் புத்தி. எவ்வளவு வெய்யிலடிச்சாலும் காத்துப் புகாத சட்டை போட்டுக்கிட்டு, தப்பித்தவறிக் கூட காத்து புகுந்துராம இருக்க டை கட்டிக்கிட்டு, கால்ல ஷூ சாக்ஸ் போட்டுக்கிட்டு 'தமிழன் தமிழன்'னு பெருமை மட்டும் பேசுவாய்ங்ய. இதுகளையெல்லாம் போட்டுகிறது பெருமை? அத எவனாச்சும் என்னடான்னு கேட்டா, 'அது உன் கண்ணை உறுத்துதா'ன்னு என்னமோ இவுக அடைஞ்ச சாபல்யத்தப் பொறுக்க முடியாமப் பொறுமுற மாதிரிக் கேள்வி கேப்பாக. என்னே தமிழன் பெருமை!!!

சரி, தமிழன் சாதி வெறி புடிச்சு மக்களைச் சாதிவாரியாப் பிரிச்சு வச்சு காட்டுமிராண்டியா வாழ்ந்தான் (சமீபத்திய கொடுமை பாமரனின் இராசராச சோழன் பற்றியது). அப்புறம் என்ன தமிழன் பெருமை வேண்டிக்கிடக்கு?

சரி, இப்போவவது தமிழனா இருப்போம். ஆனால், தமிழ் பேச வேண்டுமா?

இல்லை.

தமிழர் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டுமா?

ஐயையோ அது எப்படி முடியும். எங்களையெல்லாம் வேட்டி கட்டிக் கொண்டு கட்டுப்பெட்டியாக, காட்டுமிராண்டியாக வாழச் சொல்கிறீர்களா?

அப்புறம் தமிழ் நாட்டிலோ அல்லது ஈழத்திலோ வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமா?

அது எப்படி? சௌகார் பேட்டை சேட்டுகளையோ பார்ப்பனர்களையோ தமிழராக ஒத்துக் கொள்ள முடியுமா?

அப்புறம்?

தமிழனாய் இருக்க வேண்டும்.

அதுதான் எப்படி?

நாங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினாலே போதும்.

ஓஹோ?

ஏதாவது ஒரு அடிப்படையில் சாதி பிரித்துக் கொண்டு இனக்குழுக்களா வாழ்றது தப்புன்னா ஒரு மொழி அடிப்படையில் ஒரு இனமாக பிரிந்து கொள்வதில் ஒரு தப்புமில்லையா?

இனத்துரோகி.

ஐயையோ.

ஒண்ணு மட்டும் சம்பந்தமில்லாம நினைவுக்கு வருது. நம்ம முத்தமிழ் அறிஞரின் வாரிசுகள், சினிமா தயாரிக்கிறாங்க; நடிக்கிறாங்க; அதெல்லாம் ஒரு தப்புமில்லன்னு வாதாடுறாங்க. ஆனா ஆயிரம் படத்துக்குக் கதை வசனம் எழுதின (என்னாது ஆயிரமா? கண்டுக்காதீங்க அப்பிடித்தான் அடிச்சு விடுவோம்) எங்க ஐயாவோட வாரிசுகள் யாரும் ஒரு சினிமாவுக்கு கதையோ வசனமோ, டைரக்ஷனோ இல்லை மூளை தேவைப்படுற ஏதாவது ஒண்ணு பண்ணுனாங்களான்னா; இல்லை. ஏன்னா தயாரிக்கிறதுக்கோ நடிக்கிறதுக்கோ பெருசா மூளைய யூஸ் பண்ணத் தேவையில்ல. ஆனா மித்ததுக்கெல்லாம் வேணும்ல?

அதே மாதிரித்தான் நீங்க தமிழ் மட்டும் பேசுங்க, ஆனா நாங்க ஓட்டை இங்கிலிசிலயோ இல்ல அதுங்கூட இல்லாம தமிழ் மட்டுமோ தான் பேசுவோம். ஆனா branded jeans, tshirt, shoe இத்யாதிகளயெல்லாம் போட்டுக்கிட்டு நீங்கள்ளாம் தமிழனாயிக்க்ணுமுன்னு திட்டுவோம். வெள்ளக்காரன் போடுற ட்ரஸ்ஸையெல்லாம் போட்டுக்குவோம். தமிழுக்கு நீ என்னடா பண்ணுனன்னு கேக்கக் கூடாது. jeans tshirt போட்டுக்கிற மாதிரி அது என்ன அவ்வளவு ஈசியா என்ன? நாங்க ஏண்டா இங்கிலிசு பேசக் கூடாதுன்னு கேக்கக் கூடாது. எங்களால jeans tshirt தான் போட்டுக்க முடியும், அதுக்கு வெறும் ஒடம்பு இருந்தாப் போதும். ஆனா இங்கிலீசு பேசுறது அப்பிடியில்லைல?