Wednesday 6 April 2011

நாம் தமிழர் - தன்னலமற்ற தலைவர்

நீங்கள் இந்தியத் தமிழராய் இருந்தால், அதுவும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழராய் இருந்தால், கண்டிப்பாக "ஒரு காமராஜ் போலவோ, ஒரு கக்கன் போலவோ தலைவர்கள் இருந்ததெல்லாம் அந்தகாலம்" என்ற அங்கலாய்ப்பை, அதுவும் குறிப்பாக தேர்தலை ஒட்டி கேள்விப்படாமலிருந்தால், நீங்கள் ஒரு அம்மாஞ்சி கூட இல்லை; அதாவது வெளியுலகின் காற்று கூட உங்களைத் தீண்டவில்லையென்றுதான் பொருள்.

'நல்ல தலைவர்' என்று யாரைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால், தேசப்பற்றும் நேர்மையும் கொண்டவராகத் தம்மை அடையாளப்படுத்த விரும்புவோர் யாராய் இருந்தாலும் கூறுவது மேற்குறிப்பிட்ட இருவருடன் ஜீவா, சத்தியமூர்த்தி போன்றோரையும் அவர்கள் கூறக்கேட்கலாம். ஈவேரா, அண்ணாத்துரை பெயர்களைக் கூட அந்த வரிசையில் வைக்க மாட்டார்கள். இந்தத் தலைவர்களெல்லாம் இவ்வகையினரானதற்கு அவர்கள் கூறும் முக்கிய காரணங்களில் சில "இந்தத் தலைவர்களெல்லாம் தன்னலமற்று இருந்தார்கள். இவர்கள் குடும்பத்துக்கு உழைக்கவில்லை; மக்களுக்கு உழைத்தார்கள், தங்களது குடும்பத்தை வறுமையில் வைத்தார்கள்" போன்றவை.

அன்மையில் கூட (அதான் தேர்தல் நேரமாச்சே) யாரோ ஒரு பெருந்தலை "காமராஜர் இறக்கும் போது அவரது பையில் XXX ரூபாய்களும்......" அதற்கு மேல் சொத்து என்று குறிப்பிடக் கூட முடியாத, இன்றைய குழந்தைகளுக்கு தினச்செலவுக்குக் கொடுத்தால் சிறார் வன்கொடுமைக்காக நம்மை சட்டத்தின் முன் நிறுத்தி வைக்ககூடிய அளவுக்கு அவர்களுக்கு வெறுப்புண்டாக்கக் கூடிய, ஒரு சொற்பத்தைக் குறிப்பிட்டார்.

எந்த வாரத்திய அரட்டை அரங்கம் (அரட்டை அரங்கம் - அதுவும் இராஜேந்தரின் வசமான பின் - ஒரு மொக்கை என்பதே எனது கருத்து) என்று நினைவில்லை, அன்மையில் ஒரு வானொலியில் கேட்டது; தலைப்பு "அடுத்த பிறப்பில் நீங்கள் என்னவாகப் பிறக்க ஆசை" (அல்லது அதனை ஒட்டி ஏதோ ஒன்று). நமது தமிழருக்கு 'மைக்' கிடைத்து விட்டால் தமது கருத்தாக கலக்கும் கலக்கு ஒரு தனி தலைப்பில் விவாதிக்க வல்லது (இடம் கிடைத்தால் இப்படி ஒரு கட்டுரை வருவது போல). 'மைக்'கில் என்ன கூறினாலும், modulation மட்டும் சரியாக வருமாறு அமைத்துக் கொண்டால் ஏன் எதற்கு என்று சிந்திக்காமலேயே கை தட்டும் நமது தமிழர் வழக்கமும் தனித் தலைப்பில் விவாதிக்க வல்லது. இவை பற்றியல்ல நான் கூற விழைந்தது. அதில் ஒருவர் - இன்றைய அரசியல் தலைவர்களெல்லாம் மொள்ளமாறிகள் (இந்த வார்த்தைப் பிரயோகம் என்னுடையது :)); அந்த காலத்துத் தலைவர்களெல்லாம் தங்களது குடும்பத்தை வறுமையில் விட்டு விட்டு நாட்டுக்கு உழைத்தார்கள், எனவே, தான் அடுத்த பிறப்பில் ஒரு காமராஜாகவோ, கக்கனாகவோ பிறந்து மக்களுக்குத் தொண்டாற்ற ஆசை என்று கூறினார். என்ன கொடுமை சார் இது? இந்தப் பிறப்பிலேயே இவர் இன்னும் குத்துக்கல்லாட்டம் இருக்கிறார். அரட்டை அரங்கத்துக்கெல்லாம் வந்து 'மைக்'கெடுத்து பொளந்து கட்டுகிறார். ஆனால் இவர் அடுத்த பிறப்பில் தான் நல்ல ஒரு தலைவராவாராம். இந்தப் பிறப்பில்? சும்மா இன்னொரு பிச்சைக்காரத் தலைவர் தலைமையேற்று, இவரையும் இவரது குடும்பத்தையும் மிக்க சம்பத்துடன் வாழ வைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். நமது இந்தக் கட்டுரையின் கருப்பொருளே தமிழரின் இந்தத் தலையாய நற்குணம் பற்றியதுதாம்.

பொருள் தொடர்பற்றதென்றாலும் குணம் தொடர்புடையது என்பதால் இன்னொரு உதாரணம். ஒரு பழைய விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி. ஒரு புறம் தமிழாசிரியர்கள் (கவனிக்க - தமிழார்வலர்கள் இல்லை); மறுபுறம் தொழில்நுட்பத் துறையில் பணியோ படிப்போ மேற்கொண்டிருப்பவர்கள் (என்னவொரு இணை?); அதாவது தமிழுக்கு எதிரானவர்கள் (அவ்வாறுதான் அன்று அவர்கள் வாதாடினார்கள்). இந்நிகழ்ச்சியில் ஒருவர் கேட்கிறார் "ஆங்கிலம் தவறாகப் பேசும் போதெல்லாம் யாராவது வந்து சரி செய்கிறார்கள்; அது போல நாங்கள் தமிழில் தவறிழைத்தால் நீங்கள் ஏன் சரி செய்யவில்லை" என்று.பொதுவாக தொழில்நுட்பத்துறையில் பணிபுரிவோருடன் ஏற்படும் விவாதத்தில் நான் அடிக்கடி சந்திக்க நேரிடும் கேள்வி, ஆங்கிலத்தில் கலைச் சொற்கள் உள்ளன; தமிழில் இல்லை. மிகப் பிரபலமான ஒரு மடக்கல் என்னவென்றால், ஒரு மிதிவண்டியின் பாகங்களை தமிழில் கூறக் கேட்பது தான். எதற்காக இந்த நீட்டி முழக்கல் என்றால், "யாரும் இதைச் செய்யவில்லையே" என்று யாரும் எதையும் செய்யாமல் அடுத்தவரைச் சுட்டும் நமது அருந்தமிழ்க் குணத்தைக் காட்டத்தான். ஆங்கிலம்->தமிழென்றாலும் சரி அரசியலென்றாலும் சரி அவர்கள் சரியில்லையே என்று மட்டும் தான் தமிழன் கூறுவான். அதாவது வெல்லம் நான் தின்பேன், விரல் மட்டும் அவன் சூப்புவான்.

ஒரு நண்பருடன் உரையாடும் போது குறிப்பிட்டார். ஒரு முறை ஜீவாவைப் பார்க்க அவரது மகள் சென்னைகுச் சென்றாராம். அப்போது ஜீவா தீவிரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாராம். மகளைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லையாம். உடனே அவரது மகள் தான் வந்திருப்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தாராம். அதற்கு, ஜீவா ஏதோ அசிரத்தையான பதிலை (அசிரத்தை என்பது எனது பிரயோகம்) இன்னொரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தாராம்; நிமிர்ந்தும் பார்க்கவில்லையாம். இதனை எனது நண்பர் ஜீவாவின் மேன்மையைக் குறிக்கக் மிகப் பெருமையாகக் குறிப்பிட்டார். அதே நண்பர் இன்னொரு முறை, ஒரு முறை கக்கன் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சாதாரண நோயாளிகள் பிரிவில் தரையில் பாயில் படுக்க வைக்கப் பட்டிருந்ததையும் அங்கு தற்செயலாக எம்ஜியார், மற்றொருவரைக் காண அங்கு வந்து, கக்கனைக் கண்டுகொண்டு அவரை வேறு பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டதையும் பெருமையாகக் குறிப்பிட்டார். தலைவர்களைப் பற்றி ஏதாவது இது போன்ற சம்பவங்கள் அவ்வபோது குறிப்பிடப்படுவது உண்டென்பதாலும், அதுவும் இது போன்ற தன்னலமற்ற தியாகங்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்பதாலும், நமது பேசு பொருள் இவ்வறான தலைவர்கள் குறித்த நமது மக்களின் எதிர்பார்ப்பு பற்றி மட்டுமே என்பதாலும் நான் இவற்றின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க முயற்சியெடுக்கவில்லை. அதாவது தமிழனுக்குத் தலைமையேற்க வருபவன் எப்படியிருக்க வேண்டுமென்றால், அடுத்த வேளைச் சோற்றுக்கு சிங்கியடிக்க வேண்டும், தனது குடும்பத்தைக் கண்டுகொள்ளக் கூடாது, நல்ல பல திட்டங்கள் தீட்டி, அவனையும் அவனது குடும்பத்தாரையும் சுபிட்சமாக வாழவைக்க வேண்டும். இந்தச் சுயநல கூட்டத்துக்கு ஆப்பு வைக்கத்தான் கிளம்பியது ஒரு கூட்டம். வெற்றியுடன் கடந்த 45 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.

எனது தனிப்பட்ட கருத்தில், காமராஜ்களையோ கக்கன்களையோ எந்த விதத்திலும் ஊக்குவிக்கக் கூடாது என்று கருதுபவன் நான். எவ்வாறு தமிழனுக்கு நாத்திகத்தை உபதேசித்து விட்டு, தனது குடும்பத்தார் கோவில் கோவிலாகச் செல்லும்போது கண்டுகொள்ளாமலிருக்கும் முத்தமிழறிஞரைக் கூறு போடுகிறோமோ அதே போல தானே தனது குடும்பத்தைக் காப்பாற்றாமல் ஊர்க்குடும்பத்தைக் காப்பாற்றக் கிளம்புபவரையும் நடத்த வேண்டும்? இவையெல்லாவற்றுக்கும் மேல், ஒருவருக்குத் தன்னலம் இருக்கக் கூடாது என்று எப்படி நாம் 'demand'பண்ண முடியும்? அது அறமா? அப்படிக் கொண்ட எதிர்பார்ப்புக்குக் கிடைத்த ஆப்பைத் தான் இன்றும் நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஒருவர் தன்னுடைய வேலைகளை விட்டு விட்டு நமக்காக உழைக்க வருகிறாரென்றால், நம்முடைய எண்ணம் எவ்வாறு இருக்க வேண்டும்? நம்மை விட அவரும் அவரது குடும்பத்தாரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தானே அறம்? எனக்கு தன்னலம் இருக்கக் கூடாது என்று நினைக்க மட்டும்தானே எனக்கு உரிமையுள்ளது? உன் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு எனது பரம்பரை சிறப்படைய உழைக்க வா என்றால் நமக்கு கருணாநிதிகளும் ஜெயலலிதாக்களும்தானே வாய்ப்பார்கள்?

தலைவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாகக் காட்டப் படுபவர் திரு நல்லக்கண்ணு. என்னுடைய கருத்தில் கருணாநிதி எந்த அளவுக்கு தவறான தலைமைக்கு முன்னுதாரணமோ அதே அளவுக்கு நல்லக்கண்ணுவும் தவறான பொது வாழ்க்கைக்கு முன்னுதாரணம்.

நமக்கு சுயநலம் மிக்க தலைமைதான் வேண்டும். சுயநலத்தில் என்ன தவறு? அடுத்தவனைக் கொள்ளையடித்து வயிறு வளர்க்காதவரை? இந்த நடைமுறைக்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணம். "உனக்கு, போதும் போதும் என்கிற அளவுக்கு ஊதியம். எனவே ஊரைக் கொள்ளையடிக்காதே. அவ்வாறு இருந்தால் அரசிலுக்கு வா. உன்னையும் உனது குடும்பத்தையும் அரசாங்கம் சுபிட்சமாக வைத்துக் கொள்ளும். அரசாங்கத்தையும் குடிகளையும் சுபிட்சமாக வைத்துக் கொள்ள நீ உழை." இது அங்கு நடைமுறை. இப்படித்தானே நமது எண்ணமும் இருக்க வேண்டும்? நமது நிலைக்கு அது தானே கட்டளைக்கல்?

ஒன்று, அரசியல்வாதிகள் கொடுப்பதை நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டளித்து அவர்களை ஆட்சியிலமர்த்தி விட்டு, தமது வாழ்வுக்கு அவர்கள் எந்த நலனையும் சேர்க்கவில்லையே எனப் புலம்பும் ஒரு பாமரக் கூட்டம்; இன்னொன்று தமது வாழ்க்கையை சுபிட்சமாக அமைத்துக் கொண்டு தலைவர்கள் தன்னலமற்ற பிச்சைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று அன்றாடம் அறிவுறுத்தும் ஒரு 'அறிவுஜீவி'க் கூட்டம்.

நெடுநாள் எனக்கு இந்த எண்ணமிருந்தாலும், இந்தப் பேத்தலை எழுத வைத்தது சமீபத்தில் இட்லிவடையில் பார்த்த ஒரு சிறு ஆவணப்படம் தான். கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=x39y1jU_lJM

இந்தப் படத்தை இயக்கியவரின் நோக்கத்தில் நான் பழுது காணமாட்டேன். ஆனால் நமது எதிர்பார்ப்பே தவறு என்ற சுய சிந்தனைகூட நமக்கில்லையே? ஆண்டாண்டு காலம் நாம் கேள்விப்பட்டு வரும் 'தன்னலமற்ற' எதிர்பார்ப்பை இந்தப் படத்தில் வரும் பாத்திரமொன்று வெளிப்படுத்தியதுதான் எனது இந்தப் பதிவுக்கு முக்கியமான தூண்டுகோல்.

படத்தில் வரும் பாத்திரங்கள், மிக நுணுக்கமாக, தமது வளங்களைப் (விலையுயர்ந்த சோபா, அடுத்த தேர்தலுக்கு அனேகமாக ஏதோவொரு கழகம் தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கப் போகும் விலையுயர்ந்த தொலைக்காட்சிப் பெட்டி, கணினி...) பிண்ணனியில் வைத்துக் கொண்டுதான் நம்முடன் உரையாடுகிறார்கள் (இயக்குநரின் தெரிவாகக் கூட இருக்கலாம்); ஆனால் நமது தலைவர்களுக்கு தன்னலம் இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது முரணல்லவா? எனது கருத்துப் படி தன்னலம் தவறல்ல; அது அடுத்தவரின் நலனை பாதிக்காதவரை.

தனிப்பட்ட முறையில், இந்தப்படம் தொழில்நுட்பத்தையும், இயக்கத்தையும் நேர்த்தியாகக் கைகொண்டிருக்கிறது. பொருள்? நாம் இன்னும் சிந்திக்க வேண்டுமோ?

எவ்வளவு திட்டினாலும் தாங்குவேன். எனவே தைரியமாகத் திட்டுங்கள்.

5 comments:

  1. ஒரு புனை பெயருக்குக் கூட ஆசைப்படாமல் (அந்தக் காலத் தலைவர் மாதிரியே) படிப்பவரை ஆட்டுவிக்கும் அசரீரி ஆசிரியரே/பதிவரே!

    மிகவும் கோலாகலமாகத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள்! உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறதே, இந்தப் பதிவுலகில்! இன்னும் ரொம்ப தூரம் பயணிக்கனுமே நீங்க (Robert Frost சொன்ன மாதிரி)!

    உங்கள் சிந்தனை அருமை, வரவேற்கத்தக்கது, வெகுவாகப் பாராட்டத் தக்கது! மிகவும் அழகாகவும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!

    உங்கள் பதிவின் வரவேற்பும், எச்சரிக்கையும் தான் முற்றிலும் பொறுத்தமில்லாமல் இருக்கிறது! ஏன் அப்படி? இப்படிச் சொன்னால் தான் மக்கள் எட்டிப் பார்ப்பார்கள் என்பதாலா? இல்லை, இந்தப் பதிவுலக மக்களின் அகராதிப்படி நீங்கள் எழுதும் விஷயமெல்லாம் அறிவிலோ, அர்த்தத்திலோ அடங்காது என்று நினைக்கிறீர்களா?
    அல்லது, உங்கள் எழுத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவோ, அர்த்தம் செய்து கொள்ளக் கூடிய திறனோ இந்தப் பதிவுலகில் வலம் வருவோர்க்கு இல்லை என்று நினைக்கிறீர்களா?

    அது எப்படியோ போகட்டும்! நீங்கள் தொடர்ந்து நிறைய பதிவுகளையும், பதிவர்களையும் படியுங்கள்! அடிக்கடி கோபம் வரும்.....சுடச் சுட எழுதி விடுங்கள் உங்கள் எண்ணங்களைப் பதிவுகளாய்! நடத்துங்கள்...நடத்துங்கள்! மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது....

    குறிப்பாக சிங்கப்பூர் எடுத்துக்காட்டு.இதை என்னுடைய பல பதிவுகளில் நான் எடுத்துக் காட்டி இருக்கிறேன்..

    சட்ட மன்ற உறுப்பினருக்கு 3 லட்சம்,முதலமைச்சருக்கு 5 லட்சம் சம்பளம் தரட்டும்,பழுதில்லை..ஆனால் தூய,அறிவார்ந்த,திறமைசாலியான அரசியல்வாதிகள் தமிழகத்திற்கோ,இந்தியாவிற்கோ கிடைக்கும் சாத்தியங்கள் கண்ணில் தெரிகிறதா?

    இப்போதிருக்கும் அனைவரும் சுனாமியில் அழிந்தாலொழிய அதற்கு வாய்ப்பு இல்லை..

    எடுத்து வைக்கும் முதல் அடியாவது இருக்க வேண்டும் என்பதைத்தான் டுபுக்கு சொல்கிறார்..
    ஒரு வழியாக அதை விமர்சிக்கும் விதத்தில் நீங்களும் இந்தப் பதிவில் சுட்டும் பொதுப்புத்தி கூட்டத்தில் அடங்குகிறீர்கள் அல்லவா?

    முதலில் அனைவரும் வாக்களிக்க முன்வருவதே நல்ல ஆரோக்கியம்தான்..கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்னும் போது,சரி,யாருக்கு வாக்களிப்பது என்று யோசிக்கவாவது செய்வார்கள்.

    அதையும் தவறு என்றால்,சும்மா விமர்சித்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்குள்தான் நீங்களும்,நானும் அடங்குவோம்.

    ReplyDelete
  3. பதிவுலகிற்குப் புதிய ஆளா..

    இந்த வேர்ட் வெரிபிகேஷனை நீக்குங்கள்..

    எரிச்சலூட்டும் விதயம் இது.

    ReplyDelete
  4. மிக்க நன்றி சாரே. ஆனால் உங்கள் கருத்திலிருந்து நான் வெகுவாய் வேறு படுகிறேன். தலைவர்களின் தன்னலம் என்பது கை காசைப் போடச்சொல்லவில்லை. ஒரு முதல்வருக்கு சம்பளம் வருடத்திர்கு இரண்டு கோடின்னு எடுதுக் கொள்ளட்டுமே. பெரிய நிறுவனத்தின் சேர்மன்கள் எடுத்துக் கொள்ளவில்லையா? ஆனால் சம்பளமும் வாங்கி விட்டு அதற்கு மேல் பொது மக்களுக்கு போய்ச்சேரவேண்டியதிலும் சுரண்டல் செய்வது மொள்ளமாரித்தனம். இப்பொல்லாம் எல்லா லெவெஅல்லையும் ஆகிடிச்சு. அதை ஏற்றும் கொண்டுள்ளோம். வெளிநாடுகளுக்கும் நம்ம ஊருக்கும் உள்ள ஒரேஎ பெரிய வித்தியாசம் இது தான். அங்க லஞ்சம் குடுப்பதும் வாங்குவதும் கேவலம். பத்து பவுண்டு அவர் கணவர் எக்ஸ்பென்சில் போட்டுவிட்டர் என்ப்தற்காக உள்துறை அமைச்சர் ரிசைன் செய்தார் இங்கிலாந்தில். நடக்குமா நம்மூரில்?

    ReplyDelete
  5. "இப்படிச் சொன்னால் தான் மக்கள் எட்டிப் பார்ப்பார்கள் என்பதாலா? இல்லை, இந்தப் பதிவுலக மக்களின் அகராதிப்படி நீங்கள் எழுதும் விஷயமெல்லாம் அறிவிலோ, அர்த்தத்திலோ அடங்காது என்று நினைக்கிறீர்களா?" - உண்மைதான் நண்பரே. அதுதான் நியாயமும் கூட. நான் கூறிவிட்டேன் என்பதற்காக அது தான் சரி என்று ஆகிவிடப்போவதில்லை. எனக்கு அறிவார்த்தமாகப் படுவது உங்களுக்கு அடி முட்டாள்தனமாகத் தெரியலாம். குறிப்பாக எழுத்துலகில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களெல்லாம் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கும் ஒருதாளத்தில் சும்மா ஒரு வடிகாலாக பதிவிட வந்திருக்கிற என்னைப் போன்ற கத்துக்குட்டிகளிடம் அதே தரத்தை - தவறுதலாக கூட இந்தத் தளத்துக்கு வந்து விட்ட - யாரும் எதிர்பார்த்து விடக் கூடாதல்லவா? அதற்குத் தான் இந்த எச்சரிக்கை. நன்றி.

    அறிவன், டுபுக்குவின் அந்தப் படத்தை நான் குறை கூறவில்லை. அந்தப் படத்தில் வெளிப்பட்ட ஒரு வார்த்தைப் பிரயோகமும் தலைவர்களுக்கான எதிர்பார்ப்பும் நெடுநாளாக நான் எண்ணிக் கொண்டிருந்த சிலவற்றை எழுதத் தூண்டி விட்டு விட்டது. அதை நான் பதிந்திருக்கிறேன். அதனால்தான் இந்தக் கருத்தை அங்கு பின்னூட்டமாக வெளியிடாமல், அவ்வாறு வெளியிட்டால் அது, மையக் கருத்திலிருந்து, விவாதத்தைத் திருப்பிவிட்டுவிடும் என்பதால், தனிப் பதிவாக இட்டிருக்கிறேன். 'ஆனால் எல்லாரும் வாக்களியுங்கள்' என்று எல்லோரும்தான் சொல்கிறார்கள். 'ஏன்' என்று யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனவே 'வாக்களிக்க வேண்டும்' என்ற கருத்துக்கு எனக்கு குழப்பமான கருத்தே உள்ளது. (போட்டி அய்யாவுக்கும் அம்மாவுக்கும்தான், அய்யா வந்தால், முட்டு சந்தில் வைத்து நமது நொங்கை எடுக்கப் போகிறார்; அம்மா வந்த்தால் மூத்திர சந்தில் வைத்து நமது நொங்கை எடுக்கப் போகிறார். நாமெல்லாம் ரொம்ம்ம்ம்ப நல்லவங்க. ஆக மொத்தம் பங்கம் நமது நொங்குக்குத் தான்.) முடிந்தால் அது பற்றி தனியாகப் பேத்துகிறேன்.

    டுபுக்கு, உங்களுடய முயற்சிக்குப் பாராட்டுக்கள். மீண்டும், உங்களது நோக்கம் பழுதில்லை. வாங்கும் காசுக்கு பங்கமில்லாமல் உழைக்கும் தன்மைக்கு நம் தமிழர் தனியாக ஒரு பதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்; அதன் பெயர் 'நேர்மை' :). நான் இங்கு, தன்னலத்தை, அதையும் ஒரு உரிமையாகக் கோருவதை, அதுவும் பொதுவான (அதாவது உங்களது குரும்படத்தில் மட்டுமல்லாது) எதிர்பார்ப்பாக உள்ளதை, அறமல்ல என்று மட்டுமல்ல, அநாகரிகம் என்றும் குறிப்பிடுகிறேன். "பத்து பவுண்டு அவர் கணவர் எக்ஸ்பென்சில் போட்டுவிட்டர் என்ப்தற்காக உள்துறை அமைச்சர் ரிசைன் செய்தார் இங்கிலாந்தில். நடக்குமா நம்மூரில்?" - அடுத்த நாட்டில் உள்ள நடைமுறைகளை உள்நாட்டு மக்களின் மனோபாவத்தைக் கணக்கில் கொள்ளாமல், முற்போக்கு என்றபெயரில், நடைமுறைப் படுத்தி விட்டு அங்கு நடப்பது இங்கு நடக்கவில்லை என்று அங்கலாய்ப்பது முறையல்ல. "தக்காளி இந்தியால் விதைக்கிறார்கள், அதனால் இங்கிலாந்தில் விதைத்தோம்; ஆனால் அங்கு விளைகிறது இங்கு விளையவில்லையே" என்று அங்கு யாரும் அங்கலாய்க்கிறார்களா? (Green house - ஐ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை :)). நன்றி.

    ReplyDelete